மத்திய தொழில்நுட்ப கல்லூரியில் 6-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

மத்திய தொழில்நுட்ப கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-18 22:27 GMT
மங்களூரு,

சூரத்கல்லில் உள்ள மத்திய தொழில்நுட்ப கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் அமைந்துள்ளது மத்திய தொழில்நுட்ப கல்லூரி. இந்த கல்லூரி மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கல்லூரியில் மராட்டியத்தைச் சேர்ந்த ஆனந்த் பதக்(வயது 20) என்பவர் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். மேலும் அவர் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்த் பதக்,கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த கல்லூரியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சூரத்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாணவர் ஆனந்த் பதக்கின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அவரை மெக்கானிக்கல் பிரிவில் உள்ள ஒரு பேராசிரியர் திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆனந்த் பதக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக மங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மத்திய தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் அனைத்து மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை அவரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த சூரத்கல் போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘‘மாணவர் ஆனந்த் பதக்குடன் சேர்த்து இதுவரை 4 மாணவ-மாணவிகள் இங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவை அனைத்திற்கும் இங்குள்ள பேராசிரியர்கள் கொடுக்கும் மனரீதியான தொல்லைகளும், தொந்தரவுகளும்தான் காரணம். இதனால் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.

அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பு குழுவினரும், போலீசாரும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்