சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் மக்கள் போராடுகிறார்கள்: கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர், அதிகாரிகள் செல்லவில்லை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. அதனால் தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-11-18 23:30 GMT
விக்கிரவாண்டி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிப்புக்குள்ளான மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து நேற்று அவர் கார் மூலம் சென்னைக்கு சென்றார்.

அப்போது உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக விக்கிரவாண்டி வந்த அவர், அங்கு சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார். அவருடன், தி.மு.க. முதன்மை செயலாளர் பாலு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் ஆகியோரும் வந்தனர்.

முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் விசாலாட்சி பொன்முடி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர் ஜெயச்சந்திரன், நகர செயலாளர் நயினாமுகமது, பாபுஜீவானந்தம், அப்துல்சலாம், திலகர், ஒரத்தூர் வெங்கடேசன், சந்தானம், பாலாஜி, பாபுஜி பாண்டியன், முண்டியம்பாக்கம் ஜெயபால், பிரசாத், யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு புத்தகங்கள் கொடுத்து மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். இதை தொடர்ந்து அங்கு மதிய உணவு சாப்பிட்ட அவர், 45 நிமிடம் கழித்து அங்கிருந்து மீண்டும் காரில் திண்டிவனம் வழியாக சென்னைக்கு சென்றார்.

அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் டெல்டா பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்லாப்பணியையும் முடித்துவிட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை கொடுத்தார். இன்று (அதாவது நேற்று) அவரே புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக பார்ப்பதாக அறிவித்துவிட்டு நேரில் சென்று அவர் பார்க்கவில்லை. காரணம், புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு உள்ளிட்ட எந்த பணியும் சரியாக நடக்கவில்லை. மின்சாரம் துண்டிப்பு, தண்ணீர் இல்லை, பால் கிடைக்கவில்லை சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நாகப்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினேன். அப்போது மக்கள் எந்த அதிகாரிகளும் வரவில்லை, அந்த பகுதி அமைச்சர்களும் வரவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இது போன்ற நிலையில் முதல்-அமைச்சர் 4 நாட்கள் தங்கியிருந்து, சீரமைப்பு பணியை முடுக்கி விட வேண்டும். இனியாவது அந்த பணியை முதல்-அமைச்சர் செய்திட வேண்டும். பணிகள் நடைபெறாததால் தான், மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த வசதிகளும் செய்யாமல் மெயின் ரோட்டில் காரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் மணியனை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், காரில் இருந்து இறங்கி போலீஸ் பாதுகாப்புடன் சுவர் ஏறி தப்பி சென்றது செய்தியாகவும் வந்துள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர தி.மு.க.வினர் பொதுமக்களுடன் சேர்ந்து நிவாரண பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்