சுனாமியை விட ‘கஜா’ புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது இயக்குனர் கவுதமன் பேட்டி

சுனாமியை விட ‘கஜா’ புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்று இயக்குனர் கவுதமன் கூறினார்.

Update: 2018-11-18 23:00 GMT
வேதாரண்யம்,

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ‘கஜா’ புயல் கடந்த 16-ந் தேதி அதிகாலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் வேதாரண்யத்தை சூறையாடி விட்டு சென்றது. பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. வேதாரண்யத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான கவுதமன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘கஜா’ புயலால் வேதாரண்யத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மேலும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ‘கஜா’ புயல் சுனாமியை விட அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சீரமைப்பு பணியில் அரசு அதிகாரிகள் சரிவர ஈடுபடவில்லை. உடனடியாக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் ஏற்பட்டு மேலும் உயிர் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களுக்கு மருத்துவ வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மீட்பு பணிகளில் மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து ஈடுபட வேண்டும்.

புயலால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. மீட்பு பணியில் மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்