கோத்தகிரியில் படுகர் இன மக்களின் சக்கலாத்தி பண்டிகை கொண்டாட்டம்

கோத்தகிரியில் படுகர் இன மக்களின் ‘சக்கலாத்தி‘ பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2018-11-18 23:00 GMT

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் 400–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வரும் படுக இன மக்கள் தங்கள் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ‘சக்கலாத்தி‘ என்ற பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் பவுர்ணமி நாளுக்கு முன்னதாக வரக்கூடிய வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் சக்கலாத்தி பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 16–ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்கள் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பண்டிகையின் முதல் நாளான கடந்த 16–ந் தேதி மாலை 5 மணியளவில் படுகர் இன மக்கள் தங்களது முன்னோர்களை வரவேற்கும் விதமாக வனப்பகுதியில் வளரும் 7 வகை தாவரங்களின் பூக்களை ஒரே கொத்தாக கட்டி வீட்டின் கூரைகளில் தலா 1 மீட்டர் இடைவெளி விட்டு சொருகி வைத்து இருந்தனர். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் முன்னோர்களுக்கு தயார் செய்த உணவு வகைகளை அனைத்து வீடுகளில் இருந்தும் சேகரித்து, அதனை குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள இடத்தில் வாழை இலையில் வைத்து படைத்து, வணங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிய மக்கள் அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை கொண்டு வீட்டு வாசல்களில் தாங்கள் வணங்கும் இயற்கை தெய்வங்களான சூரியன், சந்திரன் மற்றும் கால்நடைகளை உருவங்களாக வரைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். மேலும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் செய்திகள்