விளாத்திகுளம் பகுதியில் 2 கடைகளில் உர விற்பனைக்கு தடை வேளாண்மை இணை இயக்குனர் நடவடிக்கை
விளாத்திகுளம் பகுதியில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட 2 தனியார் கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதித்து, வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் தலைமையில் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூவண்ணன், அதிகாரி அரிபுத்திரன், உர ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று, விளாத்திகுளம் பகுதியில் உள்ள உர விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 2 கடைகளில், விவசாயிகளுக்கு உரம் வாங்கியதற்கான எந்திர ரசீது வழங்காமல், முறைகேடாக அனுமதி இல்லாத ரசீதுகளை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 2 கடைகளுக்கும் உரம் விற்பனைக்கு தடை விதித்து இணை இயக்குனர் உத்தரவிட்டார்.
மேலும், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்கள் அரசு நிர்ணயித்த விலையில் கிடைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். உரம் வாங்க செல்லும் போது விவசாயிகள் தங்களின் ஆதார் அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். உரம் வாங்கிய பின்னர் அதற்கான ரசீது விலையினை சரிபார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தற்போது விளாத்திகுளம் பகுதியில் உள்ள 15 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 45.5 டன் யூரியா இருப்பில் உள்ளது. மேலும் 25 டன் இருப்பு வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.