தூத்துக்குடி தனியார் கிட்டங்கியில் ரூ.46 லட்சம் முந்திரி கொட்டை திருட்டு; 3 பேர் கைது

தூத்துக்குடியில் தனியார் கிட்டங்கியில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள முந்திரி கொட்டைகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-18 22:30 GMT
தூத்துக்குடி, 

கேரளாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சார்பில், வெளிநாடுகளில் இருந்து முந்திரி கொட்டைகள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டை மூட்டைகள், தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் பாலத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த கிட்டங்கியில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ராஜா லாரன்ஸ் (வயது 63) மேலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முந்திரி கொட்டை மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த கிட்டங்கியில் ஷட்டரை மர்ம நபர்கள் உடைத்து, அங்கு இருந்த சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள முந்திரி கொட்டைகளை மூட்டைகளுடன் திருடி சென்று விட்டனர்.

இந்த திருட்டு சம்பத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை பிடித்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். நேற்று முன்தினம் மாலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பெரியசாமி (41), அலெக்ஸ் (32), நெல்லை புதூரை சேர்ந்த பாண்டி(34) ஆகியோரை பிடித்தனர். இந்த 3 பேரும் சிப்காட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிய முந்திரி கொட்டைகளை லாரி மூலம் தென்காசிக்கு கொண்டு சென்று, அங்கு இருந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு லாரி, கார் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்