அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்றக்கோரி உண்ணாவிரதம்

சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை மேட்டை அகற்றக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதம் நடந்தது.;

Update: 2018-11-18 22:45 GMT
சென்னை,

மன்றத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு போராட்டத்தை தொடங்கி வைத்து, தானும் உண்ணா விரதத்தில் பங்கேற்றார்.

போராட்டத்தின்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையின் முக்கிய பகுதியான கொடுங்கையூரில் உள்ள குப்பை மேட்டால் நீண்டகாலமாக அங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். நோய் தாக்கம் மற்றும் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தங்கள் ஆரோக்கியத்தை இழந்து வருகிறார்கள். 2006-ம் ஆண்டு கொடுங்கையூர் குப்பை மேட்டில் நடந்த ஆய்வில் 9 நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் வெளியாவது கண்டுபிடிக்கப்பட்டது.

2014-ம் ஆண்டு நடந்த ஆய்வில் அது 19 ஆக உயர்ந்திருக்கிறது. திட, திரவ மற்றும் மருத்துவ கழிவுகள் எரித்து அழிக்கப்படுவதால், சுவாசிக்கும் காற்றில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது. கொடுங்கையூர் குப்பைமேடு உடனடியாக அகற்றப்பட வேண்டும். தேங்கும் குப்பைகளை வெளிநாடுகளில் உள்ளது போன்ற நவீன முறையில் அழிக்க உரிய நடவடிக்கைகளை அரசு கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு தி.மு..க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்