சேத்துப்பட்டில் குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் சாவு
சேத்துப்பட்டில் குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேத்துப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த மோதனபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன், தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களது மகள் பூமிகா (வயது 14) 8-ம் வகுப்பு படித்து வந்தாள். மகன் பாலாஜி (10), 5-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்தவர் பாலு மகள் சுபாஷினி (9) 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் நேற்று பூமிகா, பாலாஜி, சுபாஷினி ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு விறகு எடுக்க சென்றனர். அப்போது ஏரியில் உள்ள குட்டையில் மழைநீர் தேங்கி இருந்தது.
மழைநீரில் இறங்கி 3 பேரும் விளையாடினர். அப்போது திடீரென சேற்றில் சிக்கி பூமிகா, சுபாஷினி ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாஜி ஓடிசென்று இதுகுறித்து ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தான்.
இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் சிறுமிகளின் பெற்றோர் அங்கு வந்தனர். அவர்கள் குட்டையில் இறங்கி தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பிறகு பூமிகா மற்றும் சுபாஷினியை அவர்களால் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சேத்துப்பட்டு தாசில்தார் தமிழ்மணி, வருவாய் ஆய்வாளர் ஜீவா ஆகியோர் சம்பவம் இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இதையடுத்து போலீசார், 2 சிறுமிகளின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.