கஜா புயல் பாதிப்பை சரிக்கட்ட மத்திய அரசிடம் இடைக்கால நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது - நாராயணசாமி தகவல்

கஜா புயல் பாதிப்பை சரிக்கட்ட மத்திய அரசிடம் இடைக்கால நிவாரணம் கேட்கப்பட்டுள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-11-18 00:15 GMT

புதுச்சேரி,

கஜா புயல் காரைக்கால் பகுதியில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவாதிக்க புதுவை அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், அரசு செயலாளர்கள் அன்பரசு, கந்தவேலு, பார்த்திபன், கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் பங்கஜ்குமார் ஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் புயல் பாதிப்பு சேதங்கள், நிவாரண பணிகள், மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக புதுச்சேரியில் 16 குழுக்களும், காரைக்காலில் 6 குழுக்களும் உருவாக்கப்பட்டன. காரைக்காலில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

புயலினால் உணவு, குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து துறைகள் சார்பிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. கஜா புயல் கரையை கடந்தபோது புதுவையில் காற்று மற்றும் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் காரைக்காலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 80 சதவீத பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் சாய்ந்து போக்குவரத்து முடங்கியது. மீனவர்களின் படகுகள் தரைதட்டி நின்றன.

நகரம், கிராமப்பகுதிகளில் வீடுகளின் கூரைகள் பெயர்ந்துள்ளன. புயல் அன்று அதிகாலையிலேயே அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் கேசவன் ஆகியோர் ரோந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் நடவடிக்கை எடுத்தனர். பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவரை புயலுக்கு இடையே அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அரசு நிர்வாகம் புயலை எதிர்கொள்ள தயாராக இருந்ததால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியை அமைச்சர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டேன். இந்த புயலில் மீன்பிடி கலன்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் 100 கி.மீ. வேகத்தில் வீசியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் பறந்துள்ளன. புயல் சேதங்கள் தொடர்பாக என்னுடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது புயல் சேதங்கள் குறித்து அறிக்கை தயாரித்து அனுப்ப கேட்டுக்கொண்டார். அவரிடம் இடைக்கால நிவாரண உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

காரைக்கால் சேதங்கள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தோம். சேதங்கள் தொடர்பாக உள்துறை செயலாளரிடம் தெரிவித்துள்ளேன். சேதமதிப்பு குறித்து இறுதி அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்புவோம். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.

காரைக்காலில் புயலின்போது 150 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இவை உடனடியாக சரி செய்யப்பட்டு தற்போது 70 சதவீதம் அளவுக்கு மின்சார சப்ளை தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்