சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளில் கஜா புயலால் ஆயிரம் ஏக்கர் நெல், வாழைகள் சேதம்

சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஜா புயலால் வரலாறு காணாத அளவில் பல ஏக்கரில் நெல், வாழைகள் சேதமடைந்தன.

Update: 2018-11-17 23:13 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள ரி‌ஷபம், ராயபுரம், நெடுங்குளம், தச்சம்பத்து, திருவேடகம், தேனூர், மேலக்கால், ஊத்துக்குழி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல், வாழைகளை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பருவமழை கைக்கொடுத்ததால் இப்பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்றன. நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் வளர்ந்து பலன் தரும் தருவாயில் இருந்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தாண்டவமாடிய கஜா புயல் காரணமாக வாடிப்பட்டி பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் நெல், வாழைகள் சாய்ந்து சேதமாயின. குறிப்பாக வாடிப்பட்டி அருகே ரி‌ஷபம் கிராமத்தில் உள்ள ராமநாதன், போஸ், தங்கவேல் உள்பட 100–க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் இருந்த 6 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் வாடிப்பட்டி பகுதியில் விடிய, விடிய மழையுடன் வீசிய சூறாவளி காற்றால் நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்தன. விராலிப்பட்டியில் கருப்புகோவிலில் பழமையான புளியமரம் சாய்ந்தது. குட்லாடம்பட்டியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 2 ஏக்கர் வாழைகள் சேதமடைந்தன. போடிநாயக்கன்பட்டியில் நந்தீஸ்வரன், முருகேசன் உள்பட நீரேத்தான், மேட்டுநீரேத்தான், வடுகபட்டி, கட்டக்குளம் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியன.

கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை மாணிக்கம் எம்.எல்.ஏ., தாசில்தார் பார்த்தீபன், வருவாய் ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்