மருத்துவமனை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி அனைத்து பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update: 2018-11-17 23:07 GMT
விருதுநகர்,

அனைத்து பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் தினக்கூலி அடிப்படையிலான தொகுப்பூதியம் மாதந்தோறும் 5-ந்தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் என்.ஆர்.எச்.எம். திட்டத்தில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு அரசாணைகளின்படி கலெக்டர் நிர்ணயிக்கும் தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். இடமாறுதல்களுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதனை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் விருதுநகரில் உள்ள துணை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு பணியாளர் சங்க தேசிய குழு உறுப்பினர் ராஜேந்திர சோழன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்க தலைவர் மணிகண்டன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் குமார், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் ரங்கசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்