நிலப்பிரச்சினையில் சாதகமாக செயல்படாத மாவட்ட கூடுதல் கலெக்டரை தாக்கிய பெண் கைது

நிலப்பிரச்சினையில் சாதகமாக செயல்படாத மாவட்ட கூடுதல் கலெக்டரை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-17 23:00 GMT
ஜல்னா,

ஜல்னா மாவட்டம் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமாக 1.3 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை கடந்த 1998-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி அப்பெண்ணின் கணவர், அருண் விஷ்ணு பாக்யவந்த் என்பவருக்கு ரூ. 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கு விற்பனை செய்தார்.

ஆனால் இந்த விற்பனையை அந்த பெண் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதை எதிர்த்து அவர் அப்பகுதி தாசில்தாரை அணுகினார். இதுகுறித்து விசாரணை நடத்திய தாசில்தார், அருண் விஷ்ணு பாக்யவந்த்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அந்த பெண் மாவட்ட கூடுதல் கலெக்டரை முறையிட்டார். கூடுதல் கலெக்டரும் அந்த பெண்ணுக்கு எதிராகவே செயல்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் சம்பவத்தன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட கூடுதல் கலெக்டரின் அறைக்குள் நுழைந்து அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டித்தீர்த்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்