கஜா புயலுக்கு எடுத்த நடவடிக்கை போன்று மாநில சுயாட்சியை மீட்க செயல்பட்டால் பாராட்டலாம் - கி.வீரமணி பேட்டி

கஜா புயலுக்கு எடுத்த நடவடிக்கை போன்று மாநில சுயாட்சியை மீட்க தமிழக அரசு செயல்பட்டால் பாராட்டலாம் என்று கோவையில் கி.வீரமணி கூறினார்.

Update: 2018-11-17 22:29 GMT

கோவை,

கோவையில் திராவிடர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு மற்றும் சமூக நீதியை நிலைநாட்டும் மாநாடு வருகிற பிப்ரவரி மாதம் 2, 3–ந் தேதிகளில் தஞ்சாவூரில் நடக்கிறது. இதில் வெளிநாடு, வடமாநிலத்தை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டில் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் 10–ந் தேதி மணியம்மையின் நூற்றாண்டு விழாவை ஒரு வருடம் கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அதுபோன்று அமெரிக்காவில் பெரியாரின் சுயமரியாதை மாநாடு செப்டம்பர் மாதத்தில் நடக்கிறது. அதில் பங்கேற்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணுவது குறித்தும் மாநாட்டில் முடிவு எடுக்கப்படுகிறது.

பெரியார் பிறந்த இந்த மாநிலத்தில் இன்னும் சாதி ஒழியவில்லை. ஆங்காங்கே ஆணவ கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். கோவில்களில் மாயமான சிலைகளை கண்டறிய சிலைதடுப்பு பிரிவு இருப்பதுபோன்று ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

கஜா புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதை வைத்து பார்க்கும்போது அவர் சரியான முறையில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. எதிர்க்கட்சி என்பது எதையும் எதிர்த்து கொண்டு இருப்பது அல்ல.

திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல. இருந்தாலும் கஜா புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுகள். இதே நடவடிக்கையை மாநில சுயாட்சியை மீட்க எடுத்தால் இன்னும் அதிகமாக பாராட்டலாம்.

குறிப்பாக தமிழக மாணவிகளை பாதித்த நீட் தேர்வு தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது என்னவானது என்று இதுவரை தெரியவில்லை. டெல்லி அரசுடன் இணக்கமாக செயல் பட்டால் போதாது. முல்லை பெரியாறு, காவிரி போன்ற மாநில சுயாட்சியை மீட்கவும் விரைந்து செயல்பட வேண்டும்.

சபரிமலை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் நிறைவேற்றி உள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்ததே இந்து அமைப்புகள்தான். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை கொண்டாடாமல், அங்கு காலூன்ற வேண்டும் என்பதற்காக பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அங்கு பிரச்சினை செய்வது இந்து அமைப்புகள் மட்டும்தான். தற்போது அதில் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து உள்ளது. ஆட்சியை பிடிக்க தான் இந்த போராட்டம். இதை வைத்து பார்க்கும்போது கடல் வற்றி கருவாடு தின்ன கொக்கு காத்திருந்து செத்தது தான் மிச்சம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கையால் மத்திய அரசுக்கு தோல்வி ஏற் பட்டு விட்டது. எனவே தனக்கு ஆதாயம் கிடைக்க தற்போது ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுத்து, சாமியார்களை தூண்டிவிட்டு மறைமுகமாக பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்