திருச்செங்கோட்டில் ரூ.16 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.16 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் 310 மூட்டை மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர்.
இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்தனர்.
இந்த ஏலத்தில் விரலி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 259 முதல் ரூ.8 ஆயிரத்து 469 வரையும், கிழங்கு ரகம் ரூ.5 ஆயிரத்து 811 முதல் ரூ.6 ஆயிரத்து 758 வரையும், பனங்காலி ரகம் ரூ.7 ஆயிரத்து 9 முதல் ரூ.10 ஆயிரத்து 100 வரையும் விற்பனை செய்யப்பட்டன.
மொத்தம் 310 மூட்டை மஞ்சள் ரூ.16 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.