வேலூர் அரசு மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பிறந்த 89 குழந்தைகள் இறந்துள்ளன அரசு மருத்துவக்கல்லூரி டீன் தகவல்

‘வேலூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை குறைபிரசவத்தில் பிறந்த 799 குழந்தைகளில் 89 குழந்தைகள் இறந்துள்ளன’ என்று அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாந்திமலர் தெரிவித்தார்.

Update: 2018-11-17 23:00 GMT
அடுக்கம்பாறை, 

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குறைபிரசவ தினம் கடைபிடிக்கப்பட்டது. குழந்தைகள் நலத்துறை தலைவர் தேரணிராஜன் தலைமை தாங்கினார். குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பொது மருத்துவத்துறை தலைவர் குமரேசன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக டீன் சாந்திமலர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

உலகம் முழுவதும் இன்று(நேற்று) உலக குறை பிரசவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகத்தில் பிறக்கும் 15 கோடி குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பல்வேறு காரணங்களால் இறக்கின்றன. குறிப்பாக ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பின்பும் உடல்நலக்குறைவு, மூளை வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்தின்மை, கை–கால்கள் செயலிழப்பு, காதுகேளாமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றன. குறைபிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதை தடுப்பதன் நோக்கமாக கடந்த 10 ஆண்டுகளாக உலக குறை பிரசவதினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு 1200 முதல் 1300 வரை குழந்தைகள் பிறக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று(நேற்று) வரை 799 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளன. அவற்றில் 89 குழந்தைகள் இறந்துவிட்டது. இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு தடுப்பு விகிதத்தில் தமிழகம் 2–ம் இடம் பெற்றுள்ளது. இதற்காக தமிழக அரசு 64 இடங்களில் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கியுள்ளது. தம்பதியர்களிடையே காணப்படும் ரத்தசோகை, ரத்தகொதிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை குறைபிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமைகின்றன. இதுகுறித்து கர்ப்பிணிகளுக்கு தெரியப்படுத்தவே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மருத்துவ குழுவினரின் மூலம் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்