புயல் கரையை கடந்தபோது புதுச்சேரியில் காற்றுடன் கனமழை

கஜா புயல் கரையை கடந்தபோது புதுவையில் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் வேரோடு மரங்கள் சாய்ந்து விழுந்தன.

Update: 2018-11-17 00:06 GMT

புதுச்சேரி,

கஜா புயல் நேற்று அதிகாலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கம் புதுவையிலும் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு முதலே புதுவையில் காற்று வீசத்தொடங்கியது. அதிகாலை 2 மணி அளவில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது மழையும் கொட்டியது.

வேகமாக வீசிய காற்றினால் மரங்கள் பேயாட்டம் போட்டன. அதேபோல் கடைகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பேனர்களும் பறந்தன.

காற்றின் வேகம் கடுமையாக இருந்ததால் முன்னெச்சரிக்கையாக இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பயங்கர சத்ததுடன் காற்று வீசியதால் நள்ளிரவில் தூக்கத்தை தொலைத்த மக்கள் காற்று, மழையை வேடிக்கை பார்த்தனர். காற்று, மழை அடங்கிய பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது.

காற்று காரணமாக நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அந்த மரங்களை பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஊழியர்கள் உடனடியாக வெட்டி அகற்றினார்கள். மரங்கள், கிளைகள் விழுந்ததால் முக்கிய வீதிகளில் குப்பை கூளமாக காட்சி அளித்தது. அவற்றை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

நேற்று காலையிலும் 2–வது நாளாக புதுவை கடற்கரை சாலையில் மக்கள் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் குழந்தைகளுடன் ஏராளமான பொதுமக்கள் கடலை வேடிக்கை பார்க்க திரண்டனர். ஆர்ப்பரித்து எழுந்த கடல் அலைகளை அவர்கள் ரசித்து பார்த்தனர். அவர்களை கடல் அருகே செல்ல விடாமல் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினார்கள்.

புதுவை தலைமை செயலகம் எதிரே உருவாக்கப்பட்டிருந்த செயற்கை மணல் பரப்பின் பெரும்பாலான பகுதி கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு இருந்தது. கடலில் எழுந்த ராட்சத அலைகளை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மிரட்சியுடன் பார்த்தனர்.

புயல் – மழை காரணமாக நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை 8–30 மணி முதல் நேற்று காலை 8–30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதுவையில் 6.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்