கஜா புயல் எதிரொலி: கரூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன

கஜா புயல் எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. மேலும் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன.

Update: 2018-11-16 23:18 GMT
கரூர்,

தமிழக கடலோர பகுதிகளில் “கஜா” புயல் மையம் கொண்டிருந்ததால் கரூர், புதுக்கோட்டை, கோவை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும் நேற்று அதிகாலை முதலே கரூர் நகரம், தாந்தோன்றிமலை, குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் தோகைமலை, தண்ணீர்பள்ளி உள்ளிட்ட சில இடங்களில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தினர். தாந்தோன்றிமலை குறிஞ்சி நகரில் சாலையோரமாக இருந்த மின்கம்பம் ஒன்று அடியோடு சாய்ந்தது. இதனால் மின்சார வயர்கள் அறுபட்டு அங்கு மின்வினியோகம் தடைபட்டது.

கரூரில் காலை முதலே தொடர்ச்சியாக மழை தூறி கொண்டே இருந்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். எனினும் வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள், போக்குவரத்தினை மேற்கொள்பவர்கள் குடைகளை பிடித்தபடியே சென்றதை காண முடிந்தது. கரூர் பஸ் நிலையத்தில் வழக்கம் போல், பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. கரூரில் புயல் பாதிக்கக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் வருவாய்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் அமராவதி, காவிரி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். கரூரில் மழையின் தாக்கம் அதிகரிக்ககூடும் என தகவல் வந்ததையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்தது. இது தொடர்பான தகவல் அந்தந்த பள்ளி, கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தன. இதனை அறியாமல் வகுப்புகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் பின்னர் விடுமுறை விட்டிருப்பதை அறிந்ததும் உடனடியாக அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லாலாபேட்டை செக்குமேட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. பலத்த காற்றோடு பெய்த மழையினால், இந்த பள்ளி வளாகத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது மரக்கிளைகள் தட்டிவிட்டதால் அங்கு இருந்த மின்வயர்கள் அறுந்து கீழே விழுந்தன. எனினும் அங்கு மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உள்பட அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் புளியமரத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த மரத்தை அகற்றி, மின்வயர்களை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கரூர் மாவட்டம் நச்சலூர், நங்கவரம், பொய்யாமணி, நெய்தலூர் காலனி, சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, சூரியனூர் ஆகிய பகுதிகளில் கஜா புயல் காரணமாக வீசிய பலத்த காற்றினால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன. வாழை தோட்டங்களில் மழைவெள்ளம் சூழ்ந்தது. இவற்றில் சில ஏக்கர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் என்பது குறிப்பிடத்தக்கது. லாலாபேட்டை அருகே சிந்தலவாடியில் 10 ஏக்கர் வாழை சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

குளித்தலை நகரம் மற்றும் கிராமப்பகுதியில் நேற்று காலை வீசிய பலத்தகாற்றின் காரணமாக வாழை மரங்கள் ஒடிந்தன. சில இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியில் சாலையோரம் இருந்த புளியமரங்கள் திருச்சி- கரூர் செல்லும் சாலையின் நடுவே சாய்ந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியவில்லை. மேலும் சாலையோரம் இருந்த சம்பத் என்பவரது வீட்டின் மேற்கூரையில் இம்மரத்தின் கிளை விழுந்ததில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. சாலையின் நடுவே மரம் விழுந்ததால் குளித்தலை பெரியபாலம், மருதூர் பிரிவு சாலை ஆகிய இடங்களில் போலீசாரால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. இதேபோல் மருதூர், குளித்தலை மலையப்பநகர், பஸ்நிலையம் அருகேயுள்ள வாய்க்கால் ஆகிய இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தும் கிளை ஒடிந்தும் மின்கம்பிகளின்மேல் விழுந்ததில் பல மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் துரிதமாக செயல்பட்டனர்.

தரகம்பட்டி அருகே கடவூர் ஒன்றியத்தில் நேற்று காலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் முடங்கி கிடந்தனர். சூறாவளி காற்றுக்கு கடவூர் தென்பகுதியில் உள்ள ஊராட்சிகளான மாவத்தூர், வாழ்வார்மங்கலம், கீழப்பகுதி, முள்ளிப்பாடி உள்பட பலகிராமங்களில் வீடுகளின் மேற்கூரைகள், ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. கரூர்-மணப்பாறை சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிராமங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சாரத்துறை மூலம் ஒவ்வொரு பகுதியாக ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்