சேதுபாவாசத்திரம் பகுதியில் 1 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன

சேதுபாவாசத்திரம் பகுதியில் ‘கஜா’ புயல் காரணமாக 1 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Update: 2018-11-16 22:15 GMT
சேதுபாவாசத்திரம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது தஞ்சை மாவட்டத்தில் பலத்த காற்று வீசியது. மாவட்டத்தின் கடலோர பகுதிகளான சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.

சேதுபாவாசத்திரம் பகுதியில் புயலின் தாக்கம் அதிகாலை 2.30 மணி அளவில் கடுமையாக இருந்தது. சேதுபாவாசத்திரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கோரதாண்டவம் ஆடிய ‘கஜா’ புயலில் 1 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அதேபோல ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. மின்கம்பங்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதை சீரமைக்க 2 நாட்களுக்கும் மேலாகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கிராம பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சேதுபாவாசத்திரம் பகுதியில் 4,200 எக்டேர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. புயல் காரணமாக 1 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இப்பகுதியில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

பேராவூரணி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பலா, வாழை, மாமரம், ஆலமரம், அரச மரம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளிலும், வீடுகளின் கூரைகளின் மீதும் விழுந்தன. சாலைகளில் மரங்கள் விழுந்தது கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேராவூரணி ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பேராவூரணியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் நுழைவு வாயிலில் இருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தால் பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து.

ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் வீடுகள் இருளில் மூழ்கியது. வீடுகளில் போடப்பட்டிருந்த ஓடுகள், வீட்டின் மேல் போடப்பட்டிருந்த இரும்பு தகடுகள் காற்றில் பறந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் அரசின் அனைத்துதுறை அலுவலர்களும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையோரம் வசித்து வரும் மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைத் துள்ளனர்.

மேலும் செய்திகள்