‘கஜா’ புயலின் கோரத்தாண்டவம்: திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயல் கோர தாண்டவமாடியது. இதனால் 4 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்களும், 1,500-க்கு மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன.

Update: 2018-11-16 23:30 GMT
திண்டுக்கல், 

வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயலால் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கியது. அப்போது 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ‘கஜா’ புயல் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த ‘கஜா’ புயல் திண்டுக்கல் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. ‘கஜா’ புயலின் தாக்கத்தால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதலே சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதையடுத்து நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

காலை 8.30 முதல் 12.30 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பலத்த மழை பெய்தது. அதுவும் பகல் 11.30 மணியளவில் ‘கஜா’ புயல் திண்டுக்கல் மாவட்டத்தின் மேல்பகுதியில் மையம் கொண்டிருந்தபோது வரலாறு காணாத அளவுக்கு பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் நகர் பகுதியில் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

திண்டுக்கல் 13-வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி. நகரில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது. புயலால் திண்டுக்கல் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

கனமழையால் நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ‘கஜா’ புயல் மையம் கொண்டிருந்தபோது திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

பலத்த காற்றுக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. இதேபோல், வேடப்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. சுதாரித்துக்கொண்டு வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள தொழிற்பயிற்சி பள்ளியில் கட்டிட மேற்கூரை பெயர்ந்து காற்றில் பறந்து விழுந்தது.

வேடசந்தூர் பகுதியில் சூறாவளி காற்று பலமாக வீசியதில் முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இந்த காற்றால் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் ஒரு டீக்கடை மீது மரம் சாய்ந்து விழுந்ததால் கடை சேதம் அடைந்தது. இதேபோல் சில வீடுகளின் சுவரும் இடிந்து விழுந்தது.

வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் மாடியில் அமைக்கப்பட்டு இருந்த 80 அடி உயரமுள்ள செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்தது. மொடக்குப்பட்டியில் வீட்டின் மீது மரம் சாய்ந்து விழுந்தது. சூறாவளி காற்று பலமாக வீசியதால் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பலத்த மழைக்கு நத்தம் அம்மன்குளம் பகுதியில் நல்லதம்பி என்பவருடைய ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டுக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. தொடர்ந்து கனமழை பெய்துகொண்டே இருந்ததால் கோவில்பட்டி திருமணிமுத்தாறில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நத்தம்-திண்டுக்கல் சாலையோரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மண் அரிப்பு ஏற்பட்டது.

நத்தம் அருகே உள்ள பாலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த நாச்சம்மாள் என்பவர், தான் வளர்த்து வந்த பசுமாட்டை வீட்டருகே கட்டியிருந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் அடித்த சூறாவளிக்காற்றில் அங்கிருந்த தென்னை மரம் மாட்டின் மீது விழுந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. நேரில் சென்று நாச்சம்மாளுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பாக வருவாய்த்துறையினரும் அங்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினர்.

சாணார்பட்டி ஒன்றிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. காலை 8 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 500 தென்னை மரங்கள், 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

கனமழை எதிரொலியாக கன்னியாபுரம் சின்னாற்று ஓடையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்ததில், அலுவலக சுற்றுச்சுவர், கேட் ஆகியவை சேதமடைந்தது.

கோபால்பட்டி இந்திராநகரில் மாசிலாமணி என்பவருடைய வீடு இடிந்து விழுந்தது. அவர், குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

‘கஜா’ புயலால் ஒட்டன்சத்திரம், பழனி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. அவற்றை மீட்பு குழுவினர் உடனடியாக அப்புறப்படுத்தியதால் போக்குவரத்து சீரானது. வரதமாநதி அணை நிரம்பி வழிவதால் பழனி- கொடைக்கானல் மலைப்பாதையில் வண்ணாந்துறை பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த பகுதியில் உள்ள 2 வீடுகள் தண்ணீரில் மூழ்கியது.சத்திரப்பட்டியில் வீசிய பலத்த காற்றுக்கு 14 வீடுகளின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்தன. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததில், சத்திரப்பட்டியில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனம் சேதமடைந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மழை பெய்துகொண்டே இருந்ததால், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வியாபாரிகளின் வருகை குறைவாக இருந்தது.

கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள மாவூர் அணை நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. அந்த தண்ணீர் மாவூத்தாறு ஓடை வழியாக அகரன்குளத்துக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு பள்ளப்பட்டி பிரிவில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் பள்ளப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால், பாண்டியராஜபுரம் வரையிலான சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. சின்னாளப்பட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டி அருகே உள்ள வயல்வெளியில் வைக்கப்பட்டு இருந்த ராட்சத விளம்பர பலகை சூறாவளி காற்றுக்கு சரிந்து விழுந்தது.


இதேபோல் செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. செம்பட்டி அருகே உள்ள காமுபிள்ளைசத்திரம் என்னுமிடத்தில் வீசிய சூறாவளிக்காற்றினால் மரங்கள் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பலத்த மழை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, எஸ்.புதுக்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் நொச்சியோடை கண்மாய் நிரம்பியது. செம்பட்டியை அடுத்த சி.கூத்தம்பட்டியில் கொட்டகை சரிந்து விழுந்து செல்லம்மாள் என்பவர் வளர்த்து வந்த பசுமாட்டுக்கு காயம் ஏற்பட்டது.


வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் 9 மரங்கள் வேரோடு சாய்ந்தன. வடமதுரை சுந்தரேசுவரர் கோவிலுக்குள் இருந்த 40 அடி உயர தைல மரம் வேரோடு சாய்ந்ததில் நவக்கிரக சுவர் சேதமடைந்தது. மேலும் மரங்கள் மின் கம்பங்களில் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் வடமதுரை, அய்யலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. கோப்பம்பட்டியில் சூறாவளி காற்றுக்கு வீட்டின் ஓடுகள் உடைந்ததில் ரேவதி (வயது 38), அவருடைய மகன் ஹேம்நாத்(17) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் அய்யலூர் அருகே உள்ள சுக்காவளி பகுதியில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுந்தரபுரி, திருக்கண், புத்தூர், செங்குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் மேற்கூரை பறந்தன. செங்குளத்துப்பட்டியில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.

வடமதுரையில் காணப்பாடி சாலையில் உள்ள ரயில்வே கேட் உடைந்து மின்சார கம்பியில் சாய்ந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியே சென்ற ரயில்கள் ஆமை வேகத்தில் அந்த பகுதியை கடந்து சென்றன. இதனையடுத்து ரெயிவே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின் கம்பி மற்றும் சேதமடைந்த ரயில்வே கேட்டை சரி செய்தனர்.

இதேபோல் வையம்பட்டி அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மதுரை- சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.45 மணி முதல் மதியம் 1.15 வரை வையம்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மின்பாதை சீரமைக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. வடமதுரை-தாமரைப்பாடி இடையே தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்தது. அதனை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவங்களினால் திண்டுக்கல்-திருச்சி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குஜிலியம்பாறை பகுதியில் வீசிய சூறைக்காற்றுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் நிலையம் அமைந்துள்ள சாலையில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. ராமகிரி, சி.அம்மாபட்டி, ஆர்.கோம்பை, சேவகவுண்டச்சிபட்டி, தளிப்பட்டி, வடுகம்பாடி, இலுப்பபட்டி, மல்லப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. வடுகம்பாடியில் ஒரு வீட்டில் ஆஸ்பெட்டாஸ் சீட் விழுந்ததில் சந்திரா (வயது 40) என்ற பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் இலுப்பப்பட்டி செல்லும் சாலையில் மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வத்தலக்குண்டு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதனால் அண்ணாநகர் 7-வது வார்டு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தரேவு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்தது. பட்டிவீரன்பட்டி மலைப்பகுதியில் பெய்த கனத்த மழையால் காமராஜர் நகர், கருணாநிதி நகர் தெருக்களில் வெள்ளநீர் புகுந்தது. சித்தரேவில் பெரியசாமி என்பவரின் வீட்டின் மீது மரம் சாய்ந்து விழுந்தது.

வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டி ஊராட்சி வெறியப்பநாயக்கன்பட்டியில் உள்ள காலனி வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. இதனையடுத்து அங்குள்ள வீடுகளில் வசித்து வந்த 40 பேர் அருகே உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா நேரில் சந்தித்து உணவுகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ‘கஜா’ புயல் கோர தாண்டவமாடியதால் சுமார் 4 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றுக்கு மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 மின்கம்பங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மேலும் செய்திகள்