மன அழுத்தத்திற்கு குடும்ப அமைப்பு தான் காரணம் போலீசாருக்கான பயிற்சியை தொடங்கி வைத்து டி.ஐ.ஜி. பேச்சு

மன அழுத்தத்திற்கு குடும்ப அமைப்பு தான் காரணம் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா கூறினார்.

Update: 2018-11-16 22:15 GMT

வேலூர், 

போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அனைத்து மாவட்டங்களிலும் நிறைவாழ்வு என்ற பெயரில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரத்தில் 3 நாட்கள் வீதம் ஒரு வருடம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தலா 40 போலீசாருக்கும், ஞாயிற்றுக்கிழமை போலீசாரின் குடும்பத்தினருக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழா வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிபி சக்ரவர்த்தி முன்னிலை வகித்து பேசினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

மன அழுத்தம் என்பது போலீசாருக்கு மட்டுமல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. நாம் அரசு ஊழியர்கள். நமது துறையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தற்கொலை நடக்கிறது. அதுகூட நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வேலை நாமாக விரும்பி சேர்ந்த வேலை. இதில் சேர்ந்த பிறகு கடமை பற்றிதான் பேசவேண்டும். உரிமை பற்றி பேசக்கூடாது.

ஊரும், மக்களும்தான் உங்கள் குடும்பம். நாம் செய்வது சேவை. அதற்கான ஊதியம் அதிகம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது பணியை சுமையாக நினைக்கக்கூடாது. மன அழுத்தம் ஏற்பட குடும்ப அமைப்புதான் காரணம். மது குடிப்பது, புகை பிடிப்பது, வேறு தவறான தொடர்பு வைத்திருப்பது இல்லாமல் இருந்தால் உங்களை குடும்ப சொத்தாக பார்ப்பார்கள். உங்கள் மனைவிக்கு நம்பிக்கை ஏற்படும்.

பெண் காவலர்களிடம் மனிதாபிமானத்துடன் நடக்கவேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலமைப்பும், உணர்வுகளும் வேறு மாதிரியாக இருக்கும். பெண் போலீசாரை சகோதரிகளாக நடத்தினால் மனஅழுத்தம் வராது. தகுதிக்கு மீறி செலவு செய்யக்கூடாது. அது சிலநேரம் தவறான பாதையில் கொண்டு போய் விடும்.

சிலர் குடும்பத்தை சரியாக நிர்வகிப்பதில்லை. விடுமுறை நாட்களை குடும்பத்திற்காக செலவிடுங்கள். செல்போன்களை தூக்கி எறிந்தாலே மன அழுத்தம் குறைந்துவிடும். பெண் காவலர்கள் எப்போதும் செல்போனை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் துறையை விட்டு தள்ளி போகிறார்கள்.

பிரச்சினை இல்லாத வாழ்க்கை இல்லை. வாழ்க்கை என்பது அழகானது. எங்கே உள்ளது மகிழ்ச்சி என்று பார்த்தால் நமது மனதில்தான் உள்ளது. போக்குவரத்து போலீசார் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவர்கள் மனிதாபிமானம், மரியாதையுடன் நடந்து கொள்ளவேண்டும். ஆசை, பேராசை, எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. பணியை விரும்பி செய்யவேண்டும். நாம் வாங்கும் சம்பளத்திற்கு 50 சதவீதம்கூட வேலை பார்ப்பது இல்லை. பொதுமக்களுடன் பேசி பழகுங்கள் மன அழுத்தம் குறையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஊரீசு கல்லூரி பேராசிரியர் மாறன், இன்ஸ்பெக்டர் அன்பரசி ஆகியோர் மன அழுத்தம் குறித்து பயிற்சியளித்தனர். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்