கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவர்? கட்சி மேலிடம் முடிவு

கர்நாடக இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டதின் எதிரொலியாக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2018-11-15 23:44 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் ஜமகண்டி, ராமநகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும், சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சிவமொக்கா தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்க வைத்தது. இந்த இடைத்தேர்தலில் முக்கியமாக பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கிய பல்லாரி நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசிடம் பறிகொடுத்துவிட்டது.

இதனால் பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த தொகுதியில் காங்கிரசை விட பா.ஜனதா 2½ லட்சம் ஓட்டுகள் குறைவாக பெற்றன.

அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் முடிவு கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு வந்து, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்திவிட்டு சென்றுள்ளார். இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமனம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். பா.ஜனதா மாநில தலைவராக உள்ள எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். 2 பதவிகளை அவரால் நிர்வகிப்பது கடினம் என்று மேலிடம் கருதுகிறது.

எனவே, கட்சிக்கு புதிய மாநில தலைவரை நியமிப்பது என்று பா.ஜனதா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென கட்சி தலைவர் பதவியை எடியூரப்பாவிடம் இருந்து பறித்தால், லிங்காயத் சமூக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று மேலிடம் சற்று அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.

எடியூரப்பாவின் ஒப்புதலை பெற்று, அவர் கை காட்டும் ஒருவரை மாநில தலைவர் பதவியில் அமர வைக்க அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசித்துள்ளார். கட்சி தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் சுனில்குமார், அரவிந்த் லிம்பாவளி மற்றும் நளின்குமார் கட்டீல் எம்.பி. ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

எடியூரப்பாவின் ஆதரவாளர்கள், மாநில தலைவர் பதவியை அவரிடம் இருந்து பறிப்பதை விரும்பவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலை எடியூரப்பா தலைமையிலேயே எதிர்கொள்ள விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்