‘கஜா’ புயல் எதிரொலி: நாகை மாவட்டத்தில் பலத்த மழை 44 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

‘கஜா’ புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. புயல் எச்சரிக்கையையொட்டி 44 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2018-11-15 23:15 GMT
நாகப்பட்டினம்,

‘கஜா’ புயல் நேற்று மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரையில் மழை பெய்யவில்லை. இருந்தாலும் வானிலை ஆய்வு மையம் நாகை அருகே புயல் கரையை கடக்கும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தது.

மாலை 4.50 மணி அளவில் நாகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதன் பின்னர் அரை மணி நேர இடைவெளியில் விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் இரவு 9.30 மணி நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு கிழக்கே 95 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. முன்னதாக புயலின் ஒரு பகுதி நாகை கரையை தொட்டு விட்டதாகவும், இரவு 10 மணிக்கு மேல் பலத்த காற்று வீச தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி நாகையில் இரவு பலத்த மழை பெய்தது. பலத்த காற்றும் வீச தொடங்கியது. மாவட்டத்தின் பிற பகுதிகளான கீழ்வேளூர், சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கஜா புயல் கரையை நெருங்க நெருங்க நாகை மாவட்டத்தில் மழை அதிகமாகி கொண்டே சென்றது.

பொறையாறு, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், திருக்கடையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன், மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது.

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் புயல் நிவாரண முகாம்களாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தன. நாகையில் 26, வேதாரண்யத்தில் 61, மயிலாடுதுறையில் 12, தரங்கம்பாடியில் 13, சீர்காழியில் 14, கீழ்வேளூரில் 8, திருக்குவளையில் 3 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 137 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆபத்தான பகுதி என கண்டறியப்பட்ட இடங்களில் அதிகாரிகள் நேற்று காலை முதலே மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தி வந்தனர். நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 44 ஆயிரத்து 87 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதில் 20 ஆயிரத்து 783 பேர் ஆண்கள். 14 ஆயிரத்து 908 பேர் பெண்கள். 6 ஆயிரத்து 396 பேர் குழந்தைகள் ஆவர்.

மேலும் செய்திகள்