காரைக்குடி அருகே போலி ‘நம்பர் பிளேட்’ மூலம் லாரியில் மணல் கடத்தல்; 2 பேர் கைது
காரைக்குடி அருகே போலி நம்பர் பிளேட் மூலம் லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டி சோதனைச்சாவடி அருகே செட்டிநாடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை பகுதியில் இருந்து மணலை ஏற்றிக்கொண்டு காரைக்குடி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் மணலுக்கான அனுமதி சீட்டினை வாங்கி சரிபார்த்தனர். அப்போது லாரியின் நம்பர் பிளேட்டில் வேறு எண்ணை போலியாக எழுதியிருப்பதும், மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து லாரி டிரைவர் லால்குடியை சேர்ந்த கிங் மானெக்சாவை போலீசார் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அந்த வழியாக வந்த மற்றொரு லாரியிலும் போலி நம்பர் பிளேட் மூலம் மணலை கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக மங்கம்மாபுரத்தை சேர்ந்த டிரைவர் இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர். இரு லாரிகளின் உரிமையாளரான தேவகோட்டையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.