அதிக மது கேட்டு விமானத்தில் ரகளை செய்த பெண் கைது

மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் அதிக மது கேட்டு ரகளை செய்த வெளிநாட்டு பெண் பயணி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-14 22:52 GMT
மும்பை,

மும்பையில் இருந்து கடந்த 10-ந் தேதி லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானத்தில் பயணிகளுக்கு மது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த வெளிநாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் கூடுதல் மது கேட்டார்.

இதற்கு விமான பணிப்பெண்கள் மறுத்தனர். இதனால் கோபம் அடைந்த அந்த பெண் பயணி கூடுதலாக மது கேட்டு விமானத்தில் ரகளையில் ஈடுபட்டார்.

இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஆண் ஊழியர் ஒருவரிடம் தகராறு செய்தார். ‘நான் ஒரு சர்வதேச கிரிமினல் வக்கீல். உங்களுக்காக வாதாடி கொண்டு இருக்கிறேன். அதற்காக பணம் வாங்குவதில்லை. ஆனால் உங்களால் எனக்கு ஒரு கிளாஸ் மது தர முடியவில்லை. இது சரியா?’ என சத்தம் போட்டார்.

மேலும் குடி போதையில் மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு, ஊழியரிடம் கைகலப்பிலும் ஈடுபட்டார்.

இதையடுத்து விமான கமாண்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுதலாக அந்த பயணிக்கு மது வழங்க வேண்டாம் என்று விமான கமாண்டர் உத்தரவிட்டார்.

பெண் பயணி விமானத்தில் திடீர் ரகளையில் ஈடுபட்டதை பார்த்து மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நடுவானில் பறந்து கொண்டு இருந்த அந்த விமானத்தில் பரபரப்பு உண்டானது.

அந்த விமானம் லண்டன் விமான நிலையம் சென்றடைந்ததும் ஏர் இந்தியா சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் பயணியை கைது செய்தனர்.

முன்னதாக வெளிநாட்டு பெண் விமானத்தில் ரகளை செய்த காட்சியை விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்