வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சலுகை கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர்,
இதுகுறித்து அவர் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க அரசு சலுகை வழங்கி உள்ளது. இதை 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2016 வரை புதுப்பிக்க தவறியவர்கள் 24.1.2019 வரை இணையதளம் மூலமாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இணையதளம் வழியாக புதுப்பிக்க இயலாதவர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ளலாம். 24.1.2019-க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
2011 முதல் 2016 வரை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் புதியதாக பதிவு செய்திருந்தாலும், பிற மாவட்டங்களுக்கு பதிவை மாற்றி இருந்தாலும் இச்சலுகை பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.