மணவாடி ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
மணவாடி ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
கரூர்,
கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியம் மணவாடி ஊராட்சி மருதம்பட்டி, மணவாடி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், வீடு வீடாகச்சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு புழுக்கள் எவ்வாறு உற்பத்தியாகிறது? என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
ஒரு வீட்டில் உள்ள குடிநீர் சேகரிப்பு தொட்டியில் கொசு புழுக்கள் உள்ளதை கண்டறிந்த கலெக்டர், அந்த வீட்டின் குழந்தைகளை அழைத்து தொட்டியின் மீது ஏற்றி கொசு புழுக்கள் உள்ளதை சுட்டிகாட்டினார். அப்போது “இதுபோன்று கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதால்தான் டெங்கு நோய் பரவி வருகின்றது. எனவே, உங்கள் பகுதிகளில் உள்ளவர்களிடம் இதை மாணவர்களாகிய நீங்கள் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் தங்களது குடியிருப்பில் சேமித்து வைத்திருக்கும் நீரை நன்றாக துணிகள் மற்றும் மூடிகளை கொண்டு மூடிவைக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தினார். மணவாடி கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் தண்ணீர் முறையாக பராமரிக்காமல் லார்வா உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அங்குள்ள பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 18-ந்தேதி விழிப்புணர்வு குறும்படமும், சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விழி்ப்புணர்வு கருத்தரங்கமும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், மருத்துவர்கள் ஆனந்தகுமார், கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாலசந்தர், கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் (கரூர்) ஈஸ்வரன், பூச்சியியல் அதிகாரி சிவக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.