எட்டயபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பயிர்க் காப்பீடு தொகை வழங்க கோரிக்கை
பயிர்க்காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி, எட்டயபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம்,
பயிர்க்காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி, எட்டயபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பிர்காவில் உள்ள 16 கிராமங்களில் கடந்த 2016–2017–ம் ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தினர். பருவ மழை போதிய அளவு பெய்யாததால் பயிர்கள் கருகின. ஆனாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடுத்தொகை வழங்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை சந்தித்து முறையிட்டும் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபம் முன்பு நேற்று காலையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சாமியா, மாவட்ட துணை செயலாளர் மார்டின், வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணசாமி, நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராமசாமி, பாலமுருகன், சுப்பையா மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பயிர் காப்பீடுத்தொகை வழங்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.