தூத்துக்குடியில் பரிதாபம் பன்றி காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் பலி

தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.;

Update:2018-11-15 03:30 IST
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளிக்கூட மாணவன் 

தூத்துக்குடி குறிஞ்சிநகர் 6–வது தெருவை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. இவருடைய மகன் சக்திகபிலன்(வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 6–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் இவன் பாதிக்கப்பட்டு இருந்தானாம். இதை தொடர்ந்து கடந்த 9–ந் தேதி இவனை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

பன்றிக்காய்ச்சல் 

அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் அவன் பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகர நல அலுவலர் வினோத்ராஜா தலைமையில் சுகாதார பணியாளர்கள் குறிஞ்சிநகர் மற்றும் அவனுடைய சொந்த ஊரான பாலையாபுரம் பகுதியில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தினர். அவனுடைய குடும்பத்தினருக்கும் பன்றிகாய்ச்சல் தடுப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. குறிஞ்சிநகர் மற்றும் பாலையாபுரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி வேறு யாராவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்பது குறித்து பரிசோதனை செய்தனர்.

190 பேர் பாதிப்பு 

தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று சுமார் 190 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் தூத்துக்குடியில் இதுவரை பன்றி காய்ச்சல் காரணமாக 3 பேர் இறந்து உள்ளனர். இதனால் அதிகாரிகள் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்