ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க அரசுக்கு, தனிக்குழு சிபாரிசு

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்ய கடந்த ஆண்டு(2017) ஒரு தனிக்குழுவை அரசு அமைத்திருந்தது.

Update: 2018-11-13 23:48 GMT
பெங்களூரு,

 மாநிலம் முழுவதும் அந்த குழுவினர் ஆய்வு நடத்தி, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு ஒரு ஆதிதிராவிடர் கொலை செய்யப்படுவதாகவும், 2 நாட்களில் ஒரு ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தை சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகவும், 4 நாட்களுக்கு ஒரு முறை ஆதிதிராவிடர் மீது தாக்குதல் நடைபெறுவது, அவர்களுக்கு தொல்லை கொடுப்பது போன்ற வழக்குகள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தினர் மீது நடைபெறும் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை கோர்ட்டில் தேங்கி கிடப்பதாகவும், அதனால் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீது நடைபெறும் தாக்குதல் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க மாவட்டத்தோறும் சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு தனிக்குழுவினர் சிபாரிசு செய்துள்ளனர்.

மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீது நடைபெறும் தாக்குதல் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யாமல் சமாதானமாக பேசி தீர்த்து வைக்கப்படுவதாகவும், இதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனிக்குழுவினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்