பெங்களூருவில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது : மத்திய மந்திரி அனந்தகுமாரின் உடல் தகனம்

பெங்களூருவில் மத்திய மந்திரி அனந்த குமாரின் உடலுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2018-11-13 23:42 GMT
பெங்களூரு,

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்ததுடன், அனந்த குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரியாக இருந்தவர் அனந்தகுமார்.

59 வயதான இவர், பெங்களூரு பசவனகுடியில் தனது மனைவி தேஜஸ்வினி, 2 மகள்களுடன் வசித்து வந்தார். பெங்களூரு தெற்கு தொகுதியி்ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 6 முறை எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்டு இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நுரையீரல் புற்றுநோயால் மத்திய மந்திரி அனந்த குமார் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சங்கரா புற்றுநோய் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மத்திய மந்திரி அனந்தகுமார் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் மரணம் அடைந்தார். கர்நாடகத்தில் எடியூரப்பாவுக்கு அடுத்ததாக பா.ஜனதாவை வளர்த்த பெருமை அனந்தகுமாரையே சாரும். இதனால் மத்திய மந்திரி அனந்தகுமார் மரணம், பா.ஜனதாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய மந்திரி அனந்தகுமாரின் உடலுக்கு நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, முதல்- மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. முன்னதாக நேற்று காலையில் பசவனகுடியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா மாநில தலைமை அலுவலகத்திற்கு அனந்தகுமாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஈசுவரப்பா, ஆர்.அசோக், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், கர்நாடக மாநில பா.ஜனதா நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அனந்தகுமாரின் உடலுக்கு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அனந்தகுமாரின் உடலுக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், ராதா மோகன்சிங், ஹர்ஷவர்தன், அஸ்வினி குமார் சவுபே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதுடன், அனந்தகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் பா.ஜனதா கட்சியினர், பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் அனந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதற்கிடையில், அனந்த குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லியில் இருந்து நேற்று காலையில் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் அவர், நேஷனல் மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்த அனந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார். இதுபோல, கர்நாடக மாநில கவர்னர் வஜூபாய் வாலாவும், அனந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அனந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மதியம் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அனந்தகுமாரின் மனைவி, குடும்பத்தினருக்கு எல்.கே.அத்வானி, அமித்ஷா ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். இதுபோல, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அனந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து, நேற்று மதியம் நேஷனல் கல்லூரி மைதானத்தில் இருந்து சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்திற்கு அனந்தகுமாரின் உடல் ஊர்வலமாக எடு்த்து செல்லப்பட்டது. இதில், பா.ஜனதா கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் வைத்து அனந்தகுமாரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

அங்கு அனந்தகுமாரின் உடல் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு, அதன்மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அப்போது முப்படை வீரர்கள் அனந்த குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த இறுதிச் சடங்கில் பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சதானந்தகவுடா, நிர்மலா சீதாராமன், பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, கர்நாடக அரசு சார்பில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே. சிவக்குமார், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சாம்ராஜ்பேட்டை மயானத்தில் நடந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள முக்கிய தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். அனந்தகுமாருக்கு மகன் இல்லாததால், அவரது உடலுக்கு பிராமண முறைப்படி சகோதரர் நந்தகுமார் இறுதி சடங்குகளை செய்தார். அப்போது அனந்தகுமாரின் உடலை பார்த்து மனைவி தேஜஸ்வினி, மகள்கள் ஆகியோர் கதறி அழுதார்கள். அதைத்தொடர்ந்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அனந்தகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்