போக்குவரத்து விதிகளை மீறிய 12 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 12 ஷேர் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-13 23:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை தேவையற்ற இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இதன் அடிப்படையில் நேற்று காலை விழுப்புரம் வட்டார போக்குவரத்து அதிகாரி பாலகுருநாதன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், கவிதா, பிரான்சிஸ் ஆகியோர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ் தலைமையிலான போக்குவரத்து போலீசாருடன் இணைந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்ததாகவும், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் 3 சக்கரங்கள் உடைய 4 ஷேர் ஆட்டோக்கள் மற்றும் 4 சக்கரங்களை கொண்ட 8 ஷேர் ஆட்டோக்கள் என 12 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு விரைவில் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், போலீசாருடன் இணைந்து இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். எனவே போக்குவரத்து விதிகளை மீறிச்செல்லும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அதன் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்