பாபநாசத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதல்; பெண் பலி 2 பேர் படுகாயம்
பாபநாசத்தில் கார் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விக்கிரமசிங்கபுரம்,
பாபநாசத்தில் கார் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி பெண் பலிதிருவேங்கடம் தாலுகா வெம்பக்கோட்டை அருகே உள்ள அம்மையார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 55). இவர் இறந்து போன தனது உறவினர் ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக வேனில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் பாபநாசத்திற்கு வந்திருந்தார். இவர்கள் வந்த வேன் பாபநாசம் கோவிலுக்கு பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் இவர்கள் திதி கொடுத்து விட்டு ஊருக்கு புறப்பட தயாராகினர். அவர்களில் சிலர் வேனில் ஏறியும், சிலர் வேனில் ஏறுவதற்கும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்று வேனில் ஏறுவதற்கு நின்றிருந்த அம்மையார்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி கிருஷ்ணம்மாள் (45), அவரது மகன் பிரகலாதன்(11), மற்றும் அதே ஊரை சேர்ந்த சந்திரன் மனைவி ஜக்கம்மாள் (30) ஆகியோர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கிருஷ்ணம்மாளை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணைஇச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்துர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பாணாங்குளத்தை சேர்ந்த சிலர் இறந்த ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக காரில் வந்துள்ளனர். இந்த காரையும் பாபநாசம் கோவில் பின்புறம் நிறுத்தி உள்ளனர். பின்னர் கார் டிரைவர் சாவியை காரிலேயே வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். அப்போது அந்த காரில் வந்தவர்களில் ஒருவரான பாணாங்குளம் பிள்ளையார் கோவிலை சேர்ந்த மாரியப்பன் மகன் முனியராஜ் (28) என்பவர் கார் சாவியை போட்டு இயக்கியுள்ளார். அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்ற வேன் மீது மோதிவிட்டு, நின்று கொண்டிருந்த 3 பேரும் மீது மோதியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக போலீசார் முனியராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.