வங்கிக்கடனை திரும்ப செலுத்த முடியாததால் சிதை அமைத்து உயிரை மாய்த்த விவசாயி

வங்கிக்கடனைதிரும்ப செலுத்த முடியாததால் சிதை அமைத்து, அதில் பாய்ந்து விவசாயி ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் நாந்தெட்டில் நடந்து உள்ளது.

Update: 2018-11-12 23:37 GMT
நாந்தெட்,

நாந்தெட் மாவட்டத்தில் உள்ள துராதி கிராமத்தை சேர்ந்தவர் பொட்டன்னா ராமலு(வயது65). விவசாயி. இவர் விவசாயத்திற்காக வங்கிகள் மற்றும் கோ-ஆபரேடிவ் சொசைட்டிகளில் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

இந்தநிலையில், மாநில அரசின் விவசாய கடன் தள்ளுபடி பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதன் காரணமாக அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று மாலை தனது வயலுக்கு சென்ற அவர் மறுநாள் வரையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் வயலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு சிதை ஒன்று எரிந்து புகைந்து கொண்டிருந்தது. அவர் அருகில் சென்று பார்த்தபோது, அதில் பொட்டன்னா ராமலு உடல் கருகி இறந்து கிடந்தார்.

இதை பார்த்து அவரது மகன் அதிர்ச்சியில் உறைந்தார். தந்தையின் கருகிய உடலை பார்த்து கதறி அழுதார். கடன் சுமையால் அவர் சிதை அமைத்து அதில் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து உம்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி சிதையில் பாய்ந்து உயிரை மாய்த்த சம்பவம் அந்த பகுதியில் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்