தனியார் பஸ் பணிமனையில்: பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்மபொருள் - கடலூரில் பரபரப்பு

கடலூர் தனியார் பஸ் பணிமனையில் மர்மபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2018-11-12 22:00 GMT
கடலூர்,


கடலூர் சொரக்கல்பட்டு பழைய ஆஸ்பத்திரிசாலையை சேர்ந்தவர் விநாயகமுருகன் (வயது 50). இவரது தம்பி கோபாலகிருஷ்ணன் (48). பஸ் உரிமையாளர்களான இவர்கள் வீட்டு அருகிலேயே பணிமனை வைத்துள்ளனர். இரவு நேரத்தில் அவர்களுக்கு சொந்தமான பஸ்கள் அங்கு தான் நிறுத்தி வைக்கப்படும்.

இந்நிலையில் பணிமனையில் ஒரு பகுதி முட்புதர்கள் மண்டி கிடந்தது. அதை நேற்று அங்கு பெயிண்டர்களாக வேலை பார்த்து வரும் வெள்ளக்கேட் பகுதியை சேர்ந்த அங்கமுத்து மற்றும் 2 பேர் சுத்தம் செய்து வந்தனர். மேலும் அங்கு கிடந்த குப்பைகள், முட்செடிகளை ஒரு பகுதியில் ஒதுக்கி மாலையில் தீ வைத்து கொளுத்தினர்.

அப்போது விநாயகமுருகனின் வீட்டு சுற்றுச்சுவர் ஓரம் கிரிக்கெட் பந்து அளவில் துணியால் சுற்றப்பட்டு மர்ம பொருள் ஒன்று கிடந் தது. இதை எடுத்த அங்கமுத்து, யாரோ தோஷம் கழித்து அதை வீசிச்சென்றிருக்கலாம் என்று நினைத்து, அதை கையால் எடுத்தார்.

பின்னர் அதை அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் தூக்கி வீசினார். அப்போது அந்த மர்ம பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த பகுதியில் சுமார் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவானது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. இந்த சத்தம் கேட்டதும் அருகில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.


இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார், உளவுப்பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் இது பற்றி பணிமனை மேலாளர் செல்வகுமார் கடலூர் புதுநகர் போலீசில், தங்களுடைய பணிமனையில் மர்ம பொருள் வெடித்து விட்டதாகவும், இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரேனும் தொழில்போட்டி காரணமாக வெடி குண்டை வீசி சென்றார்களா? அப்படி இல்லையென்றால் வெடித்த வெடிபொருள் என்ன? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பணிமனையில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்