2,500 ஆண்டுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த வண்ணாற்றாங்கரை

அவினாசியை அடுத்த தெக்கலூர் அருகே வண்ணாற்றங்கரையில் 2,500 ஆண்டுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2018-11-12 22:15 GMT
அவினாசி,

‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பது பழமொழி. பண்டைய கொங்கு மண்டலத்துக்கு அழகூட்டி வளம் தந்தது நொய்யல், நல்லாறு மற்றும் கவுசிகாநதி போன்றவை ஆகும். திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்தை சேர்ந்த தெக்கலூர், ராமநாயக்கன்பாளையம், குறுக்காபாளையம் சிற்றூர்களை ஒட்டியுள்ள வண்ணாற்றாங்கரை என்னும் இடத்தில் கடந்த 1987-ம் ஆண்டு அன்றைய கோவை மாவட்ட தொல்லியல் அலுவலர் ரா.செல்வராசு வண்ணாற்றங்கரையில் தற்போது உள்ள காட்டாற்றுப்பள்ளத்தினுள் எலும்புக்குவியல்கள் பல இடங்களில் சுண்ணாம்பு படிவ மேடுகளாக இருப்பதை கண்டார். அம்மேடுகளிலிருந்து சில எலும்புத்துண்டுகளை திரட்டி அவற்றை ஆராய்ந்து அவை விலங்கு, எலும்புகளில் கல்மாறிகள் எனக்குறித்து தமது துறையின் கோவை அகழ் வைப்பகத்தில் காட்சிப்படுத்திவைத்தார்.

பின்னர் 1990-91 கால கட்டத்தில் கோவை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தின் அன்றைய காப்பாட்சியர் சி.மகேஸ்வரன், வண்ணாற்றங்கரை எலும்புகளின் புதையுரிப்படிவங்களை நுணுகி ஆராய்ந்து அவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தினார். அவை வெறும் புதையுரிப்படிவங்கள் அல்ல என்றும் தொல்மாந்தர், தொல்விலங்கு புதையுரிப்படிவங்கள் என்று 1991-ம் ஆண்டில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த மு.கலைவாணனின் ஆணையின்படி அவரது முன்னிலையிலேயே குறிப்பிட்ட புதையுரிப்படிவ மேடுகளில் சி.மகேஸ்வரனால் ஆராய்ச்சி மேற்கொண்டு கொங்கு மண்டலம் இடைக்கற்காலமும் தன்னகத்தே கொண்ட நிலப்பரப்பு என்று உறுதி செய்தார்.

மேலும் 1991-ல் இந்திய தொல்லியல் துறையின் வல்லுநர் ஏ.கே.சர்மா ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்படி வண்ணாற்றங்கரையின் புதையுரிப்படிவங்களை ஆராய்ச்சி செய்து அவற்றில் காணப்படும் எரிந்த விறகு போல கரிபடர்ந்த பகுதிகள் நுர்கற்கருவி கொண்டு வெட்டப்பட்டதால் ஏற்பட்ட வெட்டுக்குறிகள் மாந்தராலும், விலங்குகளாலும் கடித்து போடப்பட்டதால் ஏற்பட்ட பற்குறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் காட்டு ஆடு, மான் உள்ளிட்ட சிறு வன விலங்குகளின் துண்டுகளாக்கப்பட்ட எலும்புகளின் மிச்சங்களே என்றும் ஆராய்ந்து கூறினார்.

ஏற்கனவே இடைக்கற்கள், புதிய கற்கால பெருங்கற்கால தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ள வண்ணாற்றங்கரையில் தற்போது செங்கற்களால் ஒரு சங்க கால சுவர் இருப்பதாக கூறியதை அடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட தொல்லியல் காப்பாட்சியர் எஸ்.நந்தகுமார் கடந்த 7-ந்தேதி நேரில் ஆய்வு செய்து அவை பற்றிய அறிக்கையை மாநிலத்தொல்லியல் துறைக்கு அனுப்ப உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தொல்லியல் அகழ்வராய்வு செய்யும் இடம் தன்னுடைய பழைய சூழல் மாறாமல் இருக்கவேண்டும் மேலும் அங்கு கற்பதுக்கை, நெடுங்கல், மற்றும் மக்கள் வாழ்விடங்கள் இருப்பதற்கான சான்றுகளும் சிதைவு இல்லாமல் இருக்க வேண்டும் என்று திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் தெரிவித்தார்.

நாயக்கர் கால சிறு தெய்வம் அல்லது கிராம தெய்வ வழிபாட்டு அமைப்பு கொண்ட ஒரு கருங்கல் கட்டுமானமும் பண்டைய மக்கள் பயன்படுத்திய கருப்பு-சிவப்பு வண்ண பானை ஓடுகளும், கரும்பு கசடுகளும் இங்கு காணப்படுவதால் இப்பகுதி தொடர்ந்து 2,500 ஆண்டுக்கு முன்பு மக்கள் வாழ்விடமாக திகழ்ந்தது நமக்கு தெரியவருகிறது. இதேபோன்ற சிறு தெய்வ வழிபாட்டு கட்டுமான அமைப்பு திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை பகுதியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்