திருச்செங்கோடு அருகே டயர் பஞ்சராகி தாறுமாறாக ஓடிய பஸ் டிரைவர் உள்பட 7 பேர் காயம்

திருச்செங்கோடு அருகே டயர் பஞ்சராகி தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் தென்னை மரத்தில் உரசி நின்றது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2018-11-12 22:30 GMT
எலச்சிபாளையம்,


இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராசிபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று பிற்பகல் 1 மணியளவில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்செங்கோடு அருகே மேட்டுப்பாளையம் மாதா கோவில் பகுதியில் அந்த பஸ் வந்தது.

அப்போது திடீரென அந்த பஸ்சின் டயர் பஞ்சராகி வெடித்தது. இதில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த தென்னை மரத்தில் உரசியபடி நின்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

இந்த விபத்தில், பஸ் டிரைவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த சங்கர்(வயது 46), பஸ்சில் பயணம் செய்த வையப்பமலை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(35), சீரங்ககவுண்டர்(70), ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த மயில்வாகனம்(64), அவருடைய மனைவி மலர்விழி (50), அவர்களுடைய மகள் ஸ்ரீசாந்தினி(23), எலிமேடு பகுதியை சேர்ந்த கந்தன்(70) ஆகிய 7 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்