அரசு மானியத்துடன் சோலார் மின்தகடு அமைப்பதாக கூறி பெட்டிக்கடைக்காரர் வீட்டில் நகை-பணம் அபேஸ் செய்தவர் கைது

ஜேடர்பாளையம் அருகே பெட்டிக்கடைக்காரர் வீட்டில் சோலார் மின்தகடு அமைப்பதாக கூறி வீட்டுக்குள் பீரோவில் இருந்த 8 பவுன் நகை-பணத்தை அபேஸ் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-12 22:45 GMT
பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி பானுமதி. இவர்கள் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இவர்களது வீட்டுக்கு கடந்த 2-ந் தேதி வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தன்னை என்ஜினீயர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டதுடன், உங்கள் வீட்டில் சோலார் மின்விளக்கு வசதியை மத்திய அரசின் மானியத்துடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். இதற்காக மின்தகடு மற்றும் பேட்டரிகள் அமைக்கும் இடத்தையும் பார்க்க வீட்டுக்குள் சென்றார்.

பின்னர் அந்த வாலிபர், சோலார் மின்தகடு பொருத்த மின்வயர் வாங்கி வருவதற்கு ரூ.500 முன் பணம் கொடுங்கள் நாளை வயர் வாங்கி வந்து சோலார் மின் வசதியை ஏற்படுத்தி விடுகிறேன் என்று கூறினார். இதை நம்பிய அந்த தம்பதி வீட்டின் பீரோவில் இருந்து 500 ரூபாயை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்து அனுப்பினர்.

பின்னர் மறுநாள் (3-ந் தேதி) காலை அந்த வாலிபர் தங்கவேலின் வீட்டுக்கு வயருடன் வந்தார். வீட்டுக்குள் சென்ற அந்த வாலிபர் மின் வயரை வெளியே இழுத்துசெல்லும் படி தங்கவேல் மற்றும் பானுமதியிடம் கூறியுள்ளார். உடனே அவர்களும் வயர்களை இழுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளனர்.

அதேநேரத்தில் அந்த வாலிபர் வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த 8 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்துக்கொண்டார். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்த அவர், போதிய அளவு வயர் இல்லை, அதனால் மறுநாள் வயர்கள் வாங்கி வருவதாக கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் அன்று இரவு பானுமதி பீரோவை திறந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது. அப்போது தான் சோலார் தகடு பொருத்துவதாக கூறி வந்த வாலிபர் தங்கள் வீட்டில் நகை-பணத்தை அபேஸ் செய்து விட்டு சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பானுமதி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஜேடர்பாளையம் பஸ் நிலையம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சகாயராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த பழனி என்பவருடைய மகன் மாரிமுத்து (வயது 28) என்பதும், கடந்த 3-ந் தேதி வடகரையாத்தூரில் பானுமதியின் வீட்டில் சோலார் மின் தகடு அமைப்பதாக கூறி நூதன முறையில் பணம் மற்றும் நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 8 பவுன் நகையை தனிப்படை போலீசார் மீட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘அரசு மானியத்தில் சோலார் மின் தகடு அமைப்பதாக கூறி வரும் நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்’ என்றார்கள்.

மேலும் செய்திகள்