பாண்டுப்பில் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது ‘ஷாப்பிங்’ வர மறுத்ததால் ஆத்திரம்
‘ஷாப்பிங்’ வர மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
‘ஷாப்பிங்’ வர மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விதவை பெண்ணுடன் காதல்
மும்பை பாண்டுப் ரமாபாய் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதன் காரணமாக அந்த பெண் அங்குள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அண்மையில் அந்த பெண்ணுக்கும், பங்கஜ் சத்புத்தே (வயது26) என்ற வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், பங்கஜ் சத்புத்தே தன்னுடன் ‘ஷாப்பிங்’ வருமாறு அந்த பெண்ணை வெளியே அழைத்து உள்ளார். அக்கம்பக்கத்தினர் பார்த்தால் தவறாக பேசுவார்கள் என கருதிய அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.
கழுத்தை அறுத்தார்
இது பங்கஜ் சத்புத்தேவுக்கு பயங்கர கோபத்தை உண்டாக்கியது. காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து காதலியின் கழுத்தில் அறுத்தார். இதில் அந்த பெண் படுகாயம் அடைந்து மயங்கினார். இதையடுத்து பங்கஜ் சத்புத்தே அங்கிருந்து ஓடிவிட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தந்தை மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பெண் கழுத்தில் அறுபட்டு கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பங்கஜ் சத்புத்தேவை கைது செய்தனர்.