செல்போன் பறித்த வாலிபரை பிடிக்க முயன்ற போது ஓட்டல் மேலாளர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்
செல்போன் பறித்த வாலிபரை பிடிக்க முயன்ற போது, ஓட்டல் மேலாளர் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.
நவிமும்பை,
செல்போன் பறித்த வாலிபரை பிடிக்க முயன்ற போது, ஓட்டல் மேலாளர் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார்.
செல்போன் பறிப்பு
நவிமும்பை காமோட்டே பகுதியை சேர்ந்தவர் சஜிந்திரா குமார் (வயது 38). இவர் பாண்டுப்பில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை புறநகர் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது சான்பாடாவில் வாலிபர் ஒருவர் ஏறினார். ரெயில் பேலாப்பூர் நிலையத்தை கடந்து செல்லும் போது திடீரென அந்த வாலிபர் சஜிந்திரா குமாரின் செல்போனை பறித்து விட்டு மெதுவாக சென்ற ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஜிந்திரா குமார் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார்.
தவறி விழுந்தார்
அப்போது ரெயில் வேகமாக சென்றதால் அவர் நிலைதடுமாறி ஓடும் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த அவரை ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மீட்டு பேலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பேலாப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்போன் பறித்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.