நெருல்-கார்கோபர் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கியது ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

நெருல்-கார்கோபர் இடையே ரெயில்சேவையை தொடங்கி வைத்த ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மும்பை புறநகர் ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறினார்.

Update: 2018-11-12 00:00 GMT
மும்பை, 

நெருல்-கார்கோபர் இடையே ரெயில்சேவையை தொடங்கி வைத்த ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மும்பை புறநகர் ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறினார்.

ரெயில் சேவை தொடக்க விழா

நவிமும்பை நெருல் - சீவுட் - உரண் இடையே 27 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே வழித்தடத்தில், முதல் கட்டமாக நெருல் - கார்கோபர் இடையே ரெயில் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதேபோல திவா, பன்வெல் வழியாக, வசாய்ரோடு - பென் இடையே 8 ரெயில் சேவைகளையும் தொடங்கி வைத்தார். இதுதவிர ரெயில் நிலையங்களில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 6 நடைமேம்பாலங்கள், 41 நகரும் படிக்கட்டுகள், 10 லிப்டுகள், 318 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்களையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

ரூ.65 ஆயிரம் கோடி

மும்பையில் ரெயில்வேக்கு புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு, மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.60 ஆயிரம் கோடி முதல் ரூ.65 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மும்பை புறநகர் ரெயில்வே உள்கட்டமைப்பு மேம்படுத்துவது உறுதிப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில மந்திரி வினோத் தாவ்டே, மத்திய மந்திரிகள் ஆனந்த் கீதே, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பயணிகள் மின்சார ரெயில்சேவை இன்றுமுதல் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்