பல்லாரி தொகுதியில் அதீத நம்பிக்கையே பா.ஜனதா தோல்விக்கு காரணம் ஈசுவரப்பா பேட்டி
பல்லாரி தொகுதியில் எங்களின் அதீத நம்பிக்கையே பா.ஜனதா தோல்விக்கு காரணம் என்று ஈசுவரப்பா கூறினார்.
பெங்களூரு,
பல்லாரி தொகுதியில் எங்களின் அதீத நம்பிக்கையே பா.ஜனதா தோல்விக்கு காரணம் என்று ஈசுவரப்பா கூறினார்.
கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் வெற்றி
கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் சிலரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் அமைந்தது. பல்லாரி தொகுதியில் எங்களின் அதீத நம்பிக்கையே பா.ஜனதாவின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்து விட்டது. மந்திரிகள் அனைவரும் வந்து பல்லாரியில் முகாமிட்டனர். அதனால் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
சிலர் தங்களை மண்ணின் மகன், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் தலைவர் என்று தாமாகவே அறிவித்துக் கொண்டு சுற்றுகிறார்கள். அப்படி என்றால் நாங்கள் கல்லின் மகன்களா?. பா.ஜனதா கட்சியால் தான் ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்தை கண்டு வருகிறார்கள்.
விவசாய கடன் தள்ளுபடி
பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற பாடுபட்டதாக சித்தராமையா பொய் பேசிக் கொண்டு சுற்றுகிறார். விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அறிவித்தார். இதுவரை ஒரு ரூபாய் கூட விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. குமாரசாமி தான் ஒரு காகித புலி என்று நிரூபித்துள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு கிடைத்துள்ள நீரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு
இந்த மூன்று விஷயங்கள் குறித்து வருகிற சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் நாங்கள் விவாதிக்க வலியுறுத்துவோம்.
கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 13-ந் தேதி(நாளை) பெங்களூருவில் நடக்கிறது.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.