தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டி; நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Update: 2018-11-11 22:45 GMT

புதுச்சேரி,

தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் ஓராண்டு தண்டனை பெற்றதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த தொகுதியில் கடந்த தேர்தலின்போது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டது. எனவே இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும் கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துவிட்டார்.

கடந்த தேர்தலில் அசோக் ஆனந்தை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேதுசெல்வம் 2–வது இடத்தை பிடித்தார். எனவே வருகிற இடைத்தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதுதொடர்பாக ஆலோசிக்க தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு நிர்வாகிகள் கூட்டம் பாக்குமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் அஜிஸ்பாஷா, முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில துணை செயலாளர்கள் அபிஷேகம், கீதநாதன், பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர் சேதுசெல்வம், தொகுதி பொருளாளர் தனஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மத சார்பற்ற கட்சிகளின் ஆதரவை கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்