ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை ஆணையம் விசாரிக்க வேண்டும்- தங்கதமிழ்செல்வன் பேச்சு
ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசினார்.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஜெயலலிதா ‘ஸ்லோ பாய்சன்’ (மெதுவாக கொல்லக்கூடிய விஷம்) கொடுத்து கொல்லப்பட்டதாக கூறினார். இந்த நிலையில் நேற்று அ.ம.மு.க. சார்பில் நிலக்கோட்டையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னரிடம் மனு கொடுத்த 18 பேரை, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள், சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அறிந்த வரை, ஜனவரிக்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு இல்லை.
உள்ளாட்சி தேர்தலையே நடத்த துணிவு இல்லாதவர்கள், இடைத்தேர்தலை எப்படி நடத்துவார்கள். ஒருவேளை துணிச்சல் வந்து இடைத்தேர்தலை நடத்தினால், 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்பதால், நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம்.
தமிழகத்தில் இதுவரை எந்த முதல்-அமைச்சர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை வந்துள்ளது. அந்த அளவுக்கு தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இட்லி, இடியாப்பம் சாப்பிட்டார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்பு கூறினார். ஒரு மாதம் கழித்து ஜெயலலிதா இட்லி, இடியாப்பம் சாப்பிடவில்லை என்றும், தான் பொய் சொன்னதாகவும் கூறினார். தற்போது ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து ஜெயலலிதா கொல்லப்பட்டதாக, திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார்.
‘ஸ்லோ பாய்சன்’ கொடுப்பதை கூட அறியாமல் சாப்பிடும் அளவுக்கு எப்போதும் ஜெயலலிதா இருந்தது இல்லை. என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதை ஜெயலலிதா அறிந்து வைத்திருப்பார். அந்த அளவுக்கு ஜெயலலிதா புத்திக்கூர்மையுடன் செயல்படுவார்.
எனவே, விசாரணை ஆணையம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் திண்டுக்கல் சீனிவாசன் தவறாக பேசி இருந்தால் அவருடைய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.