மரோலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர்

மரோலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை ரோந்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-11-10 23:00 GMT
மும்பை, 

மரோலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை ரோந்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி

மும்பை அந்தேரி மரோல் பவானி நகரில் செனித் என்ற கட்டிடத்தில் ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தை வாலிபர் ஒருவர் கல்லால் உடைத்து கொண்டு இருந்தார்.

இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார். அவர், வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

வாலிபர் கைது

அவர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. பின்னர் அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவரது பெயர் கணேஷ் டாப்சே (வயது24) என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்த ஸ்குருடிரைவரையும் போலீசார் கைப்பற்றினர். தனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்