திண்டுக்கல் சிறையில் செல்போன் சிக்கியது - அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல் சிறையில் செல்போன் சிக்கியது தொடர்பாக, அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-11-10 22:38 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் சிறையில், போலீஸ் சூப்பிரண்டு நடத்திய சோதனையில் செல்போன் சிக்கியது. இதுதொடர்பாக அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

புழல் சிறையில் சமீபத்தில் கைதிகள் அறையில் டி.வி., செல்போன் சிக்கின. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் மத்திய, மாவட்ட சிறைகளில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா, நேற்று திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு வந்தார். பின்னர் அவர், சிறை முழுவதும் திடீர் சோதனை நடத்தினார். அதில் கைதிகள் இருந்த ஒவ்வொரு அறையிலும் சோதனை செய்தார். அப்போது ஒரு அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அவர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த செல்போனை அவர் பறிமுதல் செய்தார். அது தொடர்பாக கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிறை அதிகாரிகளை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.

மேலும் செல்போன் பறிமுதல் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கும்படி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், செல்போன் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக பேகம்பூரை சேர்ந்த அபிபுல்லா, சையதுசிராஜுதீன், முகமதுஆரிப் உசேன், சேக்அப்துல்லா, ஹக்கீம், ஜான் என்ற அப்துல்காதர் ஆகிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

அதன்பேரில் 6 பேர் மீதும், மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அபிபுல்லா, சையது சிராஜுதீன், முகமதுஆரிப் உசேன், சேக்அப்துல்லா ஆகியோர் ஆயுதப்படை போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் கைதானவர்கள் ஆவர். மேலும் அபிபுல்லா அ.ம.மு.க. கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்