கணவன், 2-வது மனைவி கொலை: தப்பி ஓடிய முதல் மனைவி, மசாஜ் மைய உரிமையாளர் கைது சொத்து பறிபோய் விடும் என்ற பயத்தில் கொன்றதாக வாக்குமூலம்
2-வது மனைவிக்கு சொத்து போய்விடும் என கருதியதால் விவசாயியை கொலை செய்தோம். தடுக்க வந்ததால் 2-வது மனைவியும் கொலை செய்யப்பட்டதாக மசாஜ் மைய உரிமையாளருடன் கைதான பெண் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.;
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அங்கநாதவலசை கிராமம் ஈசனேரிவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது மனைவி கலா (37). இவர்களுக்கு ஆனந்த் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு கேரளாவில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஆனந்த் கேட்டரிங் படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு கலா தனது கள்ளக்காதலன் ஏகாம்பரத்துடன் கணவனை பிரிந்து கேரளாவுக்கு சென்று விட்டார். அதன்பின் சண்முகம், சாமல்பட்டியை சேர்ந்த சுஜாதா (30) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது கள்ளக்காதலன் ஏகாம்பரம் மற்றும் ஈரோட்டை சேர்ந்த கூலிப்படையினருடன் கலா சென்றுள்ளார். அங்கு கதவை திறந்தபோது சண்முகம் மற்றும் சுஜாதாவை அவர்கள் இரும்புக்கம்பியால் சரமாரியாக அடித்து கொலை செய்தனர். அப்போது கூலிப்படையை சேர்ந்த நாகராஜனுக்கும் இரும்புக்கம்பியால் அடி விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
நாகராஜன் திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் கண்முகம், சுஜாதா ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டபோது காலில் காயம் அடைந்த நாகராஜனை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்பேரில் கொலையில் ஈடுபட்ட சண்முகத்தின் முதல் மனைவி கலாவையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைதான நாகராஜன் ஈரோட்டில் மசாஜ் மையம் நடத்தி வந்ததும், கலாவின் கள்ளக்காதலனுடன் தப்பி ஓடியவர் ஈரோட்டை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் மூர்த்தி என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் கைதான கலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பான தகவல் கிடைத்தது.
கொலை செய்யப்பட்ட சண்முகமும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏகாம்பரமும் ஆரம்பத்தில் தென்னங்கன்றுகள் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். அதனால் சண்முகம் வீட்டிற்கு ஏகாம்பரம் அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவரது கள்ளத்தனமான பார்வையில் சிக்கிய கலா, அவருடன் பேசி பழகினார்.
பின்னர் இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். இந்த விஷயம் சண்முகத்திற்கு தெரிய வரவே அவர் இருவரையும் கண்டித்தார். கலாவிடம் இனிமேல் ஏகாம்பரத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என எச்சரித்தார். ஆனால் மனதையே ஏகாம்பரத்திடம் பறிகொடுத்த கலாவால் அவரை மறக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இருவரும் கேரளாவுக்கு சென்று விட்டனர்.
அதன் பின்னர் தான் சாமல்பட்டியை சேர்ந்த சுஜாதாவை 2-வதாக சண்முகம் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். பதற்றம் அடைந்த கலா தன்னை கணவர் உதறிவிடுவாரோ என்ற பயத்தில் ஊருக்கு திரும்பினார். நான் இருக்கும்போது எப்படி நீ இன்னொருத்தியை திருமணம் செய்யலாம் என கேட்கவே அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சமூக பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கலாவையும் ஏற்றுக்கொள்ளுமாறு சண்முகத்திடம் கூறவே அதன்படி கலா, சுஜாதா ஆகியோருடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினார்.
ஆனால் சுஜாதாவுடன் நெருக்கமாக இருந்து கொண்டு தன்னிடம் பேசாததால் கலாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இப்படியே போனால் அவரது பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தும் நமக்கும் நமது குழந்தைகளுக்கும் கிடைக்காமல் சுஜாதா பறித்து விடுவார். இவர்களை உயிரோடு விடக்கூடாது என கருதி அது குறித்து கள்ளக்காதலன் ஏகாம்பரத்திடம் கலா கூறினார்.
அதனை ஏற்ற ஏகாம்பரம் இவர்களை கொலை செய்வதற்காக ஈரோட்டை சேர்ந்த மசாஜ் மைய உரிமையாளர் நாகராஜன், டிராவல்ஸ் அதிபர் மூர்த்தி ஆகியோரை தொடர்பு கொண்டு வரவழைத்தார். அவர்களுடன் கடந்த 8-ந் தேதி நள்ளிரவு இருவரும் சென்று கதவை தட்டி திறந்தனர். அப்போது அவர்கள் சண்முகத்தை இரும்புக்கம்பியால் தாக்கினர். தடுத்த சுஜாதாவும் தாக்கப்பட்டார். இதில் இருவரும் இறந்து விட்டனர்.
மேற்கண்டவாறு கலா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான கலாவின் கள்ளக்காதலன் ஏகாம்பரம் மற்றும் டிராவல்ஸ் அதிபர் மூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் ஈரோட்டில் இருக்கலாம் என கருதி தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். மூர்த்தி மற்றும் நாகராஜனின் செல்போன் எண்களை வைத்து அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் யார்? இப்போது எங்கு உள்ளனர் என விசாரித்து 2 பேரையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.