குறிஞ்சிப்பாடி அருகே: கிராம நிர்வாக அலுவலருக்கு கத்திக்குத்து - கோழிப்பண்ணை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

குறிஞ்சிப்பாடி அருகே தகராறில் கிராம நிர்வாக அலுவலரை கத்தியால் குத்திய கோழிப்பண்ணை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-08 21:45 GMT
குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சி பேட்டை ஏ.ஜி.நகரை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி வளர்மதி (வயது 36). சிவானந்தம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகே எஸ்.பி. நகரை சேர்ந்த பாலகுரு மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி தனது கோழிப்பண்ணையில் இருந்த ரேடியோவில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதாக தெரிகிறது. இதை சிவானந்தம் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்த கத்தியை எடுத்து சிவானந்தத்தை குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிவானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வளர்மதி குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்