மைசூரு மாநகராட்சி மேயர், துணைமேயர் பதவிக்கு 17-ந் தேதி தேர்தல் மண்டல கமிஷனர் யஷ்வந்த் அறிவிப்பு
மைசூரு மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெறும் என்று மண்டல கமிஷனர் யஷ்வந்த் அறிவித்தார்.
மைசூரு,
மைசூரு மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெறும் என்று மண்டல கமிஷனர் யஷ்வந்த் அறிவித்தார்.
மைசூரு மாநகராட்சி மேயர் பதவி
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் மைசூரு மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதாவது 65 வார்டுகளை கொண்ட மைசூரு மாநகராட்சியில் பா.ஜனதா 22 வார்டுகளிலும், காங்கிரஸ் 19 வார்டுகளிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 18 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் ஒரு வார்டிலும் வெற்றி வாகை சூடின. மேலும் 5 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்ற முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் இடையே கடும் போட்டி எழுந்தது. இதனால் மேயர், துணை மேயர் தேர்தல் தள்ளிபோனது. அதன்பிறகு மைசூருவில் தசரா விழா நடைபெற்றதால் மேயர்- துணை மேயர் தேர்தல் மேலும் தள்ளிப்போனது.
17-ந்தேதி தேர்தல்
இந்த நிலையில் மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மைசூரு மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல கமிஷனரும், மைசூரு மாநகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான யஷ்வந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மைசூரு மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்பு மண்டல கமிஷனர் ஜெகதீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
மைசூரு மாநகராட்சிக்கான மேயர், துணை மேயர் தேர்தல் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.