காதல் தகராறில் வாலிபரை இரும்புகம்பியால் தாக்கிய கும்பல் கைது
அடையாறில் காதல் தகராறில் வாலிபரை கத்தி, இரும்புகம்பியால் தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அடையாறு,
சென்னை அடையாறு மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கன்னிமா கடை பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வாலிபரை 8 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த அந்த வாலிபரை அடையாறு போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர், அடையாறு திருவேங்கடம் தெருவை சேர்ந்த கவுதம் (வயது 23) என்பதும், அவரை அடையாறு கன்னிமா கடைசந்தை சேர்ந்த அரவிந்த் (23) மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் சேர்ந்து தாக்கியதும் தெரியவந்தது.
8 பேர் கைது
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த், திருவான்மியூரை சேர்ந்த அவரது நண்பர்கள் பிரபாகர் (23), பில்லா என்ற ரஞ்சித் (22), சூர்யா (25), மணிவண்ணன் (22), மணிகண்டன் (24), பிரேம்குமார் (22), வசந்த் (23) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அரவிந்தின் அக்காளை கவுதமின் அண்ணன், எதிர்ப்பை மீறி சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அரவிந்த் அடிக்கடி கவுதம் குடும்பத்தாரிடம் பிரச்சினை செய்து வந்ததாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் கவுதம் தனியாக வந்தபோது அரவிந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. கைதான 8 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.