வேலூர் அருகே: ஏரியில் நர்சு பிணமாக மிதந்த மர்மம் - போலீசார் விசாரணை
வேலூர் அருகே நர்சு ஒருவர் ஏரியில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் கீழ்மொணவூர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா (வயது 28), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அனிதா, வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் மாயமானார். இந்தநிலையில் நேற்று காலை சதுப்பேரி ஏரியில் அனிதா பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவரது முகத்தில் சிறு காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.